×

கடையம் பகுதியில் 600 ஏக்கர் நெற்பயிரில் பழுப்பு நோய் தாக்கம்: விவசாயிகள் கவலை

கடையம்: கடையம் வட்டாரத்தில் கார் சாகுபடியில் 600 ஏக்கரில் பயிரிட்ட நெல் பயிர்களில் பழுப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ராமநதி அணை தென்கால் பாசனத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் சுமார் 600 ஏக்கரில் நடப்பாண்டு கார் சாகுபடியில் கோவிந்தப்பேரி, ராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், மந்தியூர், வீராசமுத்திரம், ரவணசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் அம்பை 16 ரக நெல் பயிரிட்டுள்ளனர். நெல் பயிரிட்டு சுமார் 40 நாள்கள் கடந்த நிலையில் நெற்பயிரில் பழுப்பு நோய்த்தாக்கம் காணத்தொடங்கியுள்ளது. தொடர்ந்து 600 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிரிலும் பழுப்பு நோய் பரவியது. இதனால் கார் சாகுபடியில் நெல் பயிரிட்ட விவசாயிகள் அனைவருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து மந்தியூரைச் சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில், ‘கடையம் வட்டாரத்தில் கடந்த 35 ஆண்டுகளாக அம்பை 16  பயிரிட்டு வருகிறோம். இதுவரை இது போன்ற பாதிப்பு ஏற்பட்டதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளதால் இங்கு வீசும் காற்று மற்றும் மழைக்காலத்தில் பெய்யும் பெரு மழைக்கு அம்பை 16 நெல் ரகம் ஈடு கொடுப்பதோடு, மகசூலும் நன்கு கிடைக்கும். விலையும் அதிகம் கிடைக்கும். இந்த ஆண்டு கார் சாகுபடிக்கு பயிரிட்ட நெற்பயிரில் 40 நாள்கள் கடந்த நிலையில் பழுப்பு நோய் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் கூறிய மருந்து மற்றும் உரங்கள் போட்டும் சரியாகவில்லை. நெல் பயிரிட்ட அனைவருக்கும் முழுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் வீதம் மொத்தத்தில் 2 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே விவசாயிக்கு நடவுக்கு உண்டான தொகையையாவது அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்’ என்றார். இது குறித்து விவசாயி பரமசிவன் கூறும்போது, ‘நான் 11 ஏக்கரில் அம்பை 16 நெல் பயிரிட்டிருந்தேன். பயிரிட்ட ஒருமாதத்திலேயே பயிர்கள் பழுப்பு நோய்த் தாக்கப்பட்டு பாதிப்பிற்குள்ளானது. முழுமையாக 11 ஏக்கரிலும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு மட்டும் 3 லட்சத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்ததையடுத்து மண் மாதிரி மற்றும் நெற்பயிரை சோதனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். இதுவரை இந்த பகுதியில் இல்லாத வகையில் பழுப்பு நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். ராமநதி பாசனத்தில் இரண்டு போகம் நெல் விளைந்து வரும் நிலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளாகியுள்ளனர். வேளாண் துறை அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் மருந்துகள், உரம் பயன்படுத்தியும் பாதிப்பு மாறாததால் அரசு, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது….

The post கடையம் பகுதியில் 600 ஏக்கர் நெற்பயிரில் பழுப்பு நோய் தாக்கம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Kadam ,
× RELATED வர்ணாசிரமம் தான் லட்சியம் என்று கூறி...